மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 15
இரணைமடு விமானத்தளம் பிரதானமாக இருக்கையில், ஏனைய சில இடங்களில் சிறு சிறு விமான ஓடுபாதைகள் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டு வந்தது. குறைந்த தூரத்தில் பறப்பில் ஈடுபடவும், தாக்குதல்களின்போது அவசர தரையிறக்கங்களுக்காகவும் மற்றும் எதிரியை திசைதிருப்புவதற்காகவும் என திட்டமிடப்பட்டு விமான ஓடுபாதைகள் மேலும் சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன.
விடுதலைப் புலிகளின் விமான ஓடு தளம் என்பது தேவையான நீளத்திற்கு ஏற்றவகையில் நிலத்தினை பண்படுத்திவிட்டு தார் போட்டு கொள்வதுதான் விமான தளமாக காணப்பட்டது. இதற்கமைவாக பூநகரி, சுண்டிக்குளம், இருட்டுமடு, கொண்டமடு, சூதுபுரம், இருட்டுமடு என்பது உடையார்கட்டு காட்டுபகுதியில் உள்ளது. கொண்டமடு என்பது புதுக்குடியிருப்புக்கு அடுத்ததாக உள்ள மன்னாகண்டல் பகுதிக்கு அண்மையாக உள்ள இடம். சூதுபுரம் என்பது கேப்பாபுலவு எனப்படும் இடத்தில் உள்ளது. இவ்வாறு விடுதலைப் புலிகளின் விமானத் தளங்கள் இரகசியமாக அமைக்கப்பட்டிருந்தன. இதன்போதுதான் அன்று ஒருநாள் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளுக்கு விடுதலைப் புலிகளின் வான்படை அணியினை தலைவர் அறிமுகம் செய்து வைத்தார்.
(இதனை முதல் தொடரில் விரிவாகப் பார்த்திருந்தோம்.) இதன்போது இரண்டு பேர் விகிதம் விமானத்தில் ஏற்றி விமானத்தை ஓட்டிக்காட்டி மக்களின் இடங்களையும் காண்பிக்கின்றனர். தலைவர் விமானப்படையின் பலம் தொடர்பாக தளபதிகள் அறிந்திருக்க வேண்டும் என்பதற்கு அமைவாக இந்த அறிமுகம் நடைபெற்றது. இந்தப் பறப்பிற்குப் பின்னர்தான் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த சுப.தமிழ்ச்செல்வன் அவர்களால் விடுதலைப் புலிகளிடம் விமானப்படை உள்ளதென்று அறிக்கை வெளியிடப்பட்டிருந்து. இந்த அறிவிப்பு சிறீலங்கா அரசை ஆழ்ந்த குழப்பத்தில் ஆழ்த்தியது. இது அயல் நாட்டைக்கூட வியக்கவைத்தது. விடுதலைப் புலிகளின் விமானப் படையினை முடக்கவேண்டும் என்ற எண்ணம் சிறீலங்கா அரசின் எண்ணத்தில் மட்டுமல்ல, அயல்நாட்டிலும் உருவாகிறது.
இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிறீலங்கா அரசின் புலனாய்வாளர்கள் பல தரைவழித் தகவலைத் திரட்டுகின்றார்கள். அதாவது வன்னியில் இருந்து வவுனியா செல்லும் மக்களை விசாரித்து தகவல்களைப் புடுங்கி எடுக்கின்றார்கள். இதன்போது விடுதலைப் புலிகளின் பயிற்சித் தளங்கள் வெளிப்படையாகிறது. வன்னியில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும்போது சிறீலங்காப் படையின் வேவு விமானம் வன்னி மண்ணை வேவு எடுக்கின்றது. இதில் வாகனப் போக்குவரத்துப் பாதைகள், ஆள் நடமாட்டங்கள் என்பவற்றை வைத்து சில இடங்களை இனம்கண்டு, தரைவழித் தகவல் ஊடாக விடுதலைப் புலிகளின் இடங்களை உறுதிப்படுத்துகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, சிங்கள அரசிடமிருந்து நியாமான தீர்வொன்று கிடைக்காது என்பதையும், போரையே மீண்டும் அது முன்னெடுக்கும் என்பதையும் தெரிந்திருந்த விடுதலைப் புலிகளின் தலைமை வரப்போகும் போரை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டிருந்தார்கள். இதற்கான தயார்படுத்தல்கள் வன்னியில் பரவலாக நடைபெற்றது. மக்கள் படை, உள்ளக பாதுகாப்பு படை, எல்லைப்படை என மக்கள் கட்டுமானங்கள் கொண்டுவரப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு பயிற்சி நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக ஊதியம் வழங்கப்பட்டு பணிசெய்யும் விடுதலைப் புலிகளின் தேசிய இராணுவ படையணி ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படையணியில் இளைஞர்கள், யுவதிகள் பலர் முன்வந்து இணைந்தார்கள்.
முதற்கட்டமாக யாழ் குடாநாட்டிலிருந்து ஒருசில இளைஞர்கள் பயிற்சிக்காக பளைக்கு எடுக்கப்பட்டு சூட்டுப்பயிற்சி கொடுக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்று இளைஞரைத் திரட்டும் பணியல் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதாவது யாழ்குடாவை எதிரியிடமிருந்து மீட்டு எடுக்க அங்குள்ள இளைஞர்கள் ஒத்துழைக்கவேண்டும் என்பதற்காக ஒருசில இடங்களிலிருந்து முச்சக்கரவண்டி சாரதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என விடுதலை உணர்வுள்ளவர்களைக் கட்டம்கட்டமாக பளைக்கு அழைத்து சில முக்கியத்தவர்கள் கதைத்து பயிற்சி கொடுக்கப்படுகிறது. பளையில் உள்ள எரிமலை எனும் பயிற்சித் தளத்திலும் ஜி-12 எனும் பயிற்சித்தளத்திலும் சூட்டுப்பயிற்சி அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகிறது.
யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும், வன்னி மக்கள் மத்தியிலும் கதை பரவலாக அடிபடுகிறது. விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதல் செய்யப்போகிறார்கள். முதல் யாழ்ப்பாணத்தைத்தான் பிடிப்பார்கள். யாழ்ப்பாணம் பிடித்தால் சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகளின் கால்களில் விழுந்துவிடும் என்றெல்லாம் பல கதைகள் மக்கள் மத்தியில் உலாவருகின்றது. இவற்றை எல்லாம் இராணுவ புலனாய்வாளர்கள் அறிகிறார்கள். அன்று யாழ்மாவட்ட இராணுவப் பொறுப்பாளராக இருந்த ஜி.ஏ.சந்திரசிறி இத்தகவலை அறிந்து தனது தலைமைக்கு தெரியப்படுத்தி இதனூடாக கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையான படைமுன்னணி அரண்களை பலப்படுத்துகிறார்கள். பாகிஸ்தான் நாட்டு இராணுவ அதிகாரிகள் இந்த முன்னணி காவலரண்களை வந்து பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண முன்னணி காவலரண்களில் உள்ள படையினர் உசார் படுத்தப்பட்டு இரகசியமாக சில படை செயற்பாடுகளில் சிறீலங்கா படையினர் ஈடுபடுகின்றார்கள். ஏராளமான எறிகணைகள் யாழ்குடாநாட்டில் குவிக்கப்படுகிறது. மேலதிக படையினர் குவிக்கப்படுகிறார்கள். கவச வாகனங்கள் களமுனையில் நகர்த்தப்படுகிறது. இவ்வாறு படைநகர்த்தல்களை சிறீலங்கா படையினர் இரகசியமாக மேற்கொள்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் 2006ம் ஆண்டு 8ம் மாதம் 11 திகதி மாலை 5.00 மணியளவில் ஏ9 வீதி முகமாலைப் பாதையில் விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதலைத் தொடுக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல் ஊடாக வன்னிக்களமுனை போர்க்கள முனையாக மாறுகிறது.
இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் சிறீலங்கா படையின் காவலரண்களைத் தகர்த்து அழித்துச் சென்றாலும் இரண்டாம் நிலையான காவலரண்களை தாண்டிச்செல்ல முடியவில்லை. காரணம் சிறீலங்கா படையினர் பின்வாங்கி தமது நிலைகளை இலக்குவைத்து கடுமையாகத் தாக்குகின்றார்கள். இதனால், பிடித்த நிலைகளில் நிலைகொள்ள முடியாதளவிற்கு கடும் எதிர்ப்பை விடுதலைப் புலிகள் எதிர்கொள்கிறார்கள். இதனால், அன்றைய தாக்குதல் இடைநிறுத்தப்படுகின்றது. இந்நிலையில் வன்னிக்கும் - யாழ்குடாவிற்குமான தரை வழிப்பாதையை சிறீலங்கா மூடுகின்றது. வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் சென்றவர்கள் யாழ்ப்பாணத்திலும், யாழில் இருந்து வன்னி சென்றவர்கள் வன்னியிலும் முடக்கப்படுகிறார்கள்.
உறவுகளைப் பிரிந்து வாழும் மக்கள் வன்னியில் இருந்து வெளியேறமுடியாத சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில், மன்னார் உயிலங்குளம் சோதனைச் சாவடி, வவுனியா ஓமந்தை சோதனை சாவடி ஊடாகவும் சென்ற அதேவேளை, ஒருசில இளைஞர்கள் காட்டு வழியாக மன்னார் சென்று படையினரின் கட்டுப்பாட்டுக்கும், கடல்வழியாக படகில் யாழ்ப்பாணமும் சென்றடைகின்றர்கள். இவ்வாறு இருக்கையில் மன்னார் உயிலம் குளம் சோதனை நிலையத்தில் இறுக்கமான கட்டுப்பாட்டினை படையினர் மேற்கொள்கின்றார்கள். ஓமந்தை சோதனை நிலையத்தில் சிறீலங்கா படையினர் பொருட்களுக்குக் கட்டுப்பாடு, தடை விதிக்கின்றார்கள். உயிலங்குளம் போக்குவரத்துப் பாதை கண்காணிப்பில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை குழு விலகிக் கொள்கிறது. இதன்போது விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடையில் துப்பாக்கி முனையில் தொடங்கிய தாக்குதல் பூதாகரமாகின்றது.
(தொடரும்...)
நன்றி:ஈழமரசு
No comments:
Post a Comment