Breaking News
recent

வரலாறு தந்த வல்லமைக்கு வயது 56 (காணொளிகள்)


தமிழீழத் தேசியத்தலைவரை தமிழினம் பெருமையுடன் வாழ்த்துகின்றது!

  • தங்க வண்ண மேனியும்
    புன்னகை தாங்கும் இன்ப வதனமும்
    கண்களில் வீரப் போர்ப் புலிப்பார்வையும்
    புவனம் யாவையும் தன்வயமாக்கிடும்
    எங்களின் கோமகன்
    தமிழ்க்குலக் காவலன்
    தமிழீழ நாட்டின் மேதகு தலைவன்
    பிரபாகரன் எனும் பெருநிதியே
    உன் திருமலரடியை தினம் போற்றிப்
    பணிகின்றோம்
    வரலாறு தந்த வல்லமையே
    ஏங்கித் தவிக்கின்றோம்
    எங்கிருந்தாலும் நீ
    எழுந்தருள்க.

நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சயம்

  • இன்று நவம்பர் 26 ஆம் திகதி. இந்நன்னாள் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவர்க்குமே ஒரு பொன்நாள். இந்நாள் தான் தமிழர் எழுச்சியின் சின்னமாகத் திகழும் தங்கத் தமிழீழ மண் தந்த தன்மானத் தமிழன், தமிழீழ விடுதலைப் புரட்சியின் நாயகன் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள்.

    தமிழரின் வரலாறு காணாத வகையில் வீரத்தை நிலைநிறுத்தி புதிய புறனானூற்றைப் படைத்துவரும் எங்கள் தேசியத் தலைவர் தனது ஐம்பத்தி ஐந்தாவது அகவையை நிறைவு செய்யும் இவ்வேளையில் தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் வாழ்த்திக் கொண்டிருக்கிறது. நாமும் அவரைப் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துவோமாக.

இவ்வேளையில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் தேசிய உணர்வினை, தமிழ் மொழி உணர்வினை, தமிழின விடுதலை உணர்வினை ஊட்டுகின்ற நிலவரம்| , இன்போதமிழ் போன்ற ஊடகங்கள் வாயிலாக தேசியத் தலைவரை வாழ்த்துவதென்பது மிகப் பொருத்தமானதே.

அந்நியர் தாய்த் தமிழக மண்ணில் காலடி வைக்க முனைந்த போது, வீரபாண்டிய கட்டப்பொம்மன், ஊமைத்துரை, வாஞ்சிநாதன் போன்றோர் வீறுகொண்டு எழுந்தனர். ஆனால், அப்போதும் தமிழகம் கிளர்ந்து எழவில்லை. தமிழர்கள் உறங்கிக் கிடந்தனர்;. ஏன் இப்போதும் தான்! கோழைத் தமிழனக்கு மத்தியில் வாழ்வதை விட தூக்கில் தொங்கி மடிவதே மேல் என அந்த மானமிகு மறவர்கள் மாண்டு போயினர். இதனால் தானோ என்னவோ 'விதியே விதியே தமிழ்ச்சாதியை என் செய நினைத்தாய்?" என மகாகவி மனம் நொந்து பாடினார்.

பகற்கனவாகிப் போன பழம் பெருமைகளுக்கு உயிர் கொடுத்தவர் எமது தலைவரே. இதன் மூலம் வீரத்தளபதி எவரையும் தமிழினம் நீண்ட காலமாகத் தோற்றுவிக்கவில்லையே என்ற குறையை ஈழத்தமிழன் ஒருவன் போக்கியிருப்பது எமக்கெல்லாம் பெருமை அல்லவா?

உலகத் தமிழர்கள் அனைவர்க்குமே ஒரு முகவரியை பெற்றுத் தந்தவன் எமது தானைத் தலைவனே. தமிழினம் எனும் போது உலகம் இப்போது உற்று நோக்குவது ஏழு கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவையோ அல்லது மலேசியா தென்னாபிரிக்காவையோ அல்ல. முப்பத்தைந்து இலட்சம் தமிழர்கள் வாழும் இலங்கையைத் தான்.

'தாயை அதிகம் பார்த்தவன் இல்லை. தமிழ்த்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை" என்று தமிழகக் கவிஞன் அறிவுமதி சும்மாவா எழுதினான்?

உலகில் தமிழனுக்காக ஒரு இராச்சியத்தை அமைக்கும் பணிக்காக முற்றிலுமாகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள தியாகப்படை ஒன்றைக் கட்டியெழுப்பி அதனை வழிநடத்திச் செல்லும் பிரபாகரனின் சாதனைகளை, அலாதியான அரசியல், இராணுவ வெற்றிகளைக் கண்டு உலகமே பிரமித்து நிற்கிறது. அவற்றைத் தமது சாதனைகளாக, வெற்றிகளாகக் கருதி தமிழர்கள் பெருமைப் படுகின்றனர்.

தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரம் அவரது இலட்சிய வேட்கை ஆகவும் தணியாத தாகமாகவும் உருப்பெற்றது. விடுதலைப் போராட்டமே அவரது வாழ்க்கை ஆக மாறியது. இப்படியொரு அபரிதமான ஆற்றல் மிக்க தலைவன் எமக்கு கிடைத்தது நாம் செய்த பெரும் பேறாகும். இந்தச் சரித்திர நாயகன் காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பதே பெருமைக்குரிய விடயம்.

  • தன் இன மானத்தை தான் மதித்தான்
    பகை தாவியே வந்திட கால் மிதித்தான்

என தமிழீழக் கவிஞன் புதுவை இரத்தினதுரையின் புரட்சிக் கவிதை தலைவரைப் போற்றிப் பாடும் விதம் எவ்வளவு பொருத்தம் பாருங்கள்!

இப்புவியில் தமிழர்களுக்கென்று ஒரு தேசம் உருவாகி, தமிழினமும் தமிழ் மொழியும் எழுச்சி பெற்றிட தமிழீழம் தந்த தவப் புதல்வன் தம்பி பிரபாகரனின் பாதையில் அணி திரளுங்கள்.

ஏனெனில், நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சயம்!


இது காலம் இட்ட கட்டளை.

  • வரலாறு என்பது தன்னியக்கம் உடையதன்று. வரலாற்று மாற்றத்திற்கு தனிமனிதர்களின் குறுக்கீடு அவசியமாகின்றது. இதனால்தான் பெரும் புரட்சிகளை விடுதலைப் போராட்டங்களை சமுதாய மாற்றங்களைப்பற்றி நாம் பேசிக்கொள்ளும் போது அவற்றை முன்னின்று நகர்த்திய ஆற்றல் மிக்க ஆளுமை மிக்க தனித்துவம் மிக்க தனிமனிதர்களைப்பற்றிப் பேசிக்கொள்கிறோம். இன்றும் அதற்காகவே வாழ்வு தொடர்கின்றோம்

விதியின் அடிப்படையில் வரலாற்றை காலச்சக்கரமாகக் கற்பிதம் செய்த ஒரு சமூகத்தில் பிறந்த எங்கள் தலைவர் அதை உடைத்து புதிய வரலாற்றை எழுதுகின்றார். மனிதத்தில் அபாரமான நம்பிக்கை கொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாற்றிற்கு தரும் விளக்கம் உற்று நோக்கற்பாலது.

  • "வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தியன்று. அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்துவிடும் சூத்திரப்பொருளுமன்று. வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் வெளிப்பாடு. மனிதனே வரலாற்றைப் படைக்கின்றான். மனிதனே தனது தலைவிதியை நிர்ணயிக்கின்றான்."

    என செயல்மூலம் காட்டியபின் கூறுகின்றார்.Prabaharan physiognomy speaks

    "You can't be neutral in a moving train! என்னும் நூலை எழுதிய Howard Zinn என்னும் அமெரிக்க வரலாற்று ஆசிரியர் the struggle for justice should never be abandoned because of the apparent overwhelming power of those who have the guns and the money and who seem invincible in their determination to hold on to it. That apparent power has, again and again, proved vulnerable to human qualities less measurable than bombs and dollars"… எனக் கூறி அந்த மனிதப்பண்புகளாக அவர் குறிப்பிடும் moral fervor, determination, unity, organization, sacrifice, wit, ingenuity, courage, patience அனைத்தையும் எங்கள் தலைவர் உள்வாங்கியுள்ளார்.

    இதனை தலைவர் விடையத்திலும் காண்கின்றோம்.

வரலாற்றை நகர்த்துவோருக்கு கடந்த காலத்தைப் பற்றிய தெளிவான ஞானமும் நிகழ்காலத்தைக் கூர்மையாக அவதானிக்கும் ஆற்றலும் அவசியமாகின்றது. இவை கைவரப் பெற்றவர்களே காலத்தை வென்று வரலாறு சமைக்கின்றார்கள்.

இவர்கள் சமைக்கும் எதிர்காலம் மானிடத்தின் உயர்ந்த விழுமியங்களை நோக்கிச் செல்கின்றன. கலியை வென்று கிருதயுகம் காணும் யுக புருஷனே வேலுப்பிள்ளை பிரபாகாரன்.

புதுவையாரின் கவிதை வரிகளில் கூறுவதாயின்

  • "திண்ணையில் ஏறிய அட்டையைத் தட்டக்கூட அண்ணனைக் கூப்பிட்ட தங்கைளிலிருந்து
    அங்கையர்க் கண்ணிகள் அணிவகுத்தது எப்படி"

கிட்டுவின் மரணம். அந்த மரணத்தால் புத்திர சோகத்தில் தவிக்கும் அவரின் தாய். அந்தத் தாயை அணைத்துக் கொள்ளும் தலைவன்.

பற்றிப் படரத்தவிக்கும் தாய்மை. நெஞ்சை நெருப்பாக்கி பாசத்தின் பரிணாமத்தின் கொடுமுடியைத் தொட்டு நிற்கும் அணைப்பு அந்த அணைப்பினுள் தப்பித்தவறி விழும் அந்தத் தாயின் கையொன்றை பற்றி அணைக்கும் போராளி.

இன்னோரு வகையில் பார்க்கின் அணைத்துக் கொள்வது கிட்டுவின் தாயை மட்டுமல்ல. தமிழர் தேசத்தையே அணைத்து வாரிக் கொள்கிறான். அந்த அணைப்பில் தப்பியவற்றை அவர் வளர்த்த போராளி ஏந்துகிறான். அதே சமயம் அவரது பார்வை இந்தக் கொடுமையைச் செய்தவர்களைச் சுட்டு எரிப்பதைப்பாருங்கள். அந்தப்பார்வை செல்லும் பாதையில் எது வந்தாலும் மிதித்து வெல்லும் உறுதியும் அந்தக் கண்களில் பளிச்சிடுகின்றது.

இது புகைப்படம் அல்ல. ஒரு ஓவியம். தியாகம், வீரம், தலைமை, போராளி மாவீரம் யாவும் கோலம் காட்டி நிற்கும் இப் புகைப்படத்தை Rembrandt என்னும் ஒல்லாந்த ஓவியனது கைகளில் மலர்ந்த ஓவியங்களுக்கு ஒப்பிடலாம்

  • 'தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் சார்பாக அடக்கு முறையாளர்களுக்கு எதிராக எழுந்து நிற்பவர் மாத்திரமல்ல, தமிழர்கள் மதிப்போடும், மாண்போடும் வாழ, ஒரு தேசியத்தைக் கட்டியெழுப்பிய தலைவருமாக இருக்கின்றார். இவரை தமிழினம் பெருமையுடன் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றது."
    தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு உரியவரும்,பலருக்குச் சவாலுமானவர் பிரபாகரன்

    இலங்கை, தமிழீழம் மற்றும் உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் 2009 இல் தனது 55 வது அகவையை நிறைவு செய்யும் தமிழர் தலைவரை நெஞ்சம் நிறைந்து போற்றி வணங்கி வாழ்த்துகிறார்கள்.

ஏனென்றால் அவர் சிங்கள ஏகாதிபத்திய சக்திகளுக்குச் சவாலாகவும், தமிழ் மக்களின் விடுதலை வேட்கை நிறை வீரனாகவும் கணிக்கப்படுகிறார். சிங்கள அரசியல் சக்திகளுக்கும், அதன் அடக்குமுறையின் கருவியான இராணுவத்துக்கும் அவர் ஒரு சவால் ஆக இருப்பது மட்டுமல்ல, அடக்குமுறையை மறைமுகமாகவும், நேரடியாகவும், ஊக்குவிக்கின்ற சுயநலமிக்க வல்லரசுகளுக்குத் தடையாகவும் சவாலாகவும் எழுந்து நிற்கின்றார்.

  • இவரது தலைமைத்துவத்தை தாயகத்தில் மட்டுமல்ல உலகில் வாழுகின்ற தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டு இவரை தங்களுடைய விடுதலையின் வீரனாகவும், உலகிற் ஓர் தனித்துவ தலைமைத்துவத்தைப் பேணுபவராகவும், கருதுகின்றபடியால் அவரது 55 ஆவது அகவை நாள் முக்கியத்துவம் பெறுகின்றது. இவரின் செயற்பாடுகள் உலகின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவிக்கின்றது.

சிங்களக் காடையரும் அரச படைகளின் காடைத்தனமும் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் உயிர்வாழ்விற்கும் சவாலாக எழுந்த வேளையில், அன்றைய தமிழ்த் தலைவர்கள் என்ன செய்வது என்று அறியாது திகைத்தனர். தமிழ் மக்கள்மேல் அவிழ்த்து விடப்பட்ட காடைத்தனத்தைக் கண்டு சர்வதேசம் மௌனம் சாதித்தது. இந் நிலையில் இராணுவ அடக்குமுறைக்கும் காடைத்தனத்திற்கும் சவாலாக எவரும் அன்று இருக்கவில்லை.

சிங்கள கொடுமைத்தனத்தின் மத்தியில் அரசிற்கு சவாலாகத் தோன்றிய பிரபாகரன் இலங்கை சுதந்திம் பெற்ற பின்பு, இலங்கை அரச பயங்கரவாதம் தமிழ் மக்களைக் கொன்று எரித்தும், அவர்களுடைய உடமைகளைச் சூறையாடிக் கொள்ளையடித்தும் வந்தனர். தமிழ் மக்களின் பேரறிவின் அடையாளச் சின்னமாக கட்டி எழுப்பப்பட்ட யாழ் பொது நூலகத்தை சிங்களக் காடையர் எரித்தனர், தமிழ்ப் பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்கினர், தமிழ் மக்களின் மொழி மற்றும் கலாச்சாரச் சின்னங்களை அழித்தனர். இக் காலகட்டத்தில் தான் பிரபாகரன் தோன்றினார்.

  • அவரின் கண்களும், காதுகளும், இதயமும் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களின் கொடூரத்தைக் கண்டன, அழுகுரலைக் கேட்டன. சிங்களத்தின் கொடுமையிலிருந்து தன் மக்களை விடுதலைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்ற உறுதி மலை போல் அவர் உள்ளத்தில் திரண்டது. ஆனால், அவர் தன்னுடைய நாளுக்காகக் காத்திருந்தார். பதுங்குவதில் பலம் தேடினார்.

பலருக்கு வேதனையாகவும், அதிர்ச்சியுமாக அமைந்த தன்னுடைய திட்டங்களை மெதுவாக நடைமுறைப்படுத்தி தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பௌத்த சிங்களக் கொடூரங்களை நிறுத்தினார்;. நீங்கள் செய்த கொடூரங்கள் இனிப் போதும் என்ற செய்தியை தென்னிலங்கைச் சிங்களவருக்கு செய்தியாக அனுப்பினார். சிங்களவர்கள் இதன்பின்னரே விழித்தெழத் தொடங்கினர்.

மக்கள் மத்தியில் எழுந்து நிற்கும் ஓர் தனித்துவத் தலைவர்

இவர் தன்னுடைய தீர்க்கமான 30 வருடப் போராட்டத்துக்குப்பின் தமிழ் மக்களுடைய, உயர்ந்த-தாழ்ந்த, செல்வர்;-ஏழைகள், படித்த-படியாத மக்களின் அன்பையும் மதிப்பையும் வென்றெடுத்தார். இவரை அன்று கடுமையாக விமர்சித்தவர்களும் இன்று இவருடைய தலைமைத்துவத்தைப் பாராட்டுகிறார்கள்.

இவருடைய எதிரிகள் இவருடைய பெயரைக் கொச்சைப்படுத்தினாலும், இவர் உலகத் தலைவர்களுடைய ஒப்பற்ற கவனத்தை ஈர்ந்துள்ளார். இவர் தன்னுடைய நேர்மையான இலட்சியத்திலிருந்து கீழிறங்கி உலகின் சக்திகளுக்கு அடிமைப்பட்டு விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டவரல்ல.

'இலட்சியத்தில் நான் தவறின் என்னையே அழித்துவிடுங்கள்" என்று கூறுகின்றார்,தமிழ்த் தேசியத்தின் தனிப்பெரும் தலைமைத்துவத்தை நிர்மாணித்த தலைவரை நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறோம்.

  • ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் கடந்த 58வருடங்களாக பல எல்லைகளையும் எதிர்ப்புகளையும் கடந்திருக்கின்றது. மக்களின் விடுதலைக்கு உண்மையான அர்த்தத்தை ஊட்டி, அதேவேளையில் தீய சக்திகளான பல்வேறு அடக்குமுறையாளர்களையும் அடையாளங் காண வைத்துள்ளது. உண்மையான விடுதலைக்கு மக்கள் வாழ்வாலும் சொத்து அழிவாலும் விலை கொடுக்க வேண்டும் என்ற நிலையை நிரூபித்துள்ளது. அழிவின் சக்திகளாகச் செயற்படும் அடக்குமுறை நாடுகளையும் அரசுகளையும் அடையாளம் காட்டத் தவறியதில்லை. இந்த உண்மைகள் புதிய தமிழ்த் தேசத்தால் உள்வாங்கப்பட்டு எம் தமிழ்த் தேசியத்தின் நித்திய நினைவுகளில் பதியப்பட வேண்டியவை!!

    தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் சார்பாக அடக்குமுறையாளர்களுக்கு எதிராக எழுந்து நிற்பவர் மாத்திரமல்ல, தமிழர்கள் மதிப்போடும், மாண்போடும் வாழ, ஒரு தேசியத்தைக் கட்டியெழுப்பிய தலைவருமாக இருக்கின்றார். இவரைத் தமிழினம் பெருமையுடன் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றது.









எல்லாளன்

எல்லாளன்

No comments:

Post a Comment

Powered by Blogger.